Dr. M.Periyasamy
Winner first prize!Chief Civil Surgeon, Government Hospital Alangudi, Pudukkottai Dist.
ISA No. P1193, Secretary , ISA Pudukkottai Branch.
நாடியை
நான் தொடுவேன்
நல்லுறக்கம்
நீ தொடுவாய்- உன்
வேதனையை
நான் சுமப்பேன்
வெற்றியை
நீ பறிப்பாய்!
உன்
இதயம் துடிக்கும்....
இணைந்தே
நான் துடிப்பேன்!
உன் இமைகள்
மூடினாலும்
உயிர்
இயக்கத்தை
நான் கொடுப்பேன்!
உன்
நரம்பு மண்டலத்தில்
இருக்கும்
கரும்பு மண்டலத்தை
திறப்பேன்!
அரும்பும் வலிகளை
நீக்க
அன்பை
மருந்தாக
அங்கு விதைப்பேன்!
உன்
வாயு தேசத்தை- என்
வசமாக்குவேன்!
சுவாச
பறிமாற்றத்தில்
உன்னை சுகமாக்குவேன்!
வேதனை
உணர்வுகளை
வேதியியல் முறையில்
நீக்குவேன்
தாலாட்டும் தாயாகவும்
தாங்கிப்பிடிக்கும் சேயாகவும்
கண்ணை இமைபோல்
காத்து நிற்கும்
நான்......
தூளியாய் தாங்கி
துன்பத்தை களையும்
தூக்கம் தரும் தோழன்!!
Dr. M.Kavin Chandhar
Winner second prize!Final Year PG, Mahatma Gandhi Medical College and Research Institute, Pondicherry
ISA No. K3120/A
சுருங்கிய கன்னமும் தாழ்ந்த புருவமும்
மெலிந்த தேகமும் சிவந்த விழிகளும்
கேணி வற்றிய பிணியாளனின்
திருமேனி கொண்ட விலாசமாம்
அவர் நாடியில் சந்த நடையில்லை
நாசிகளில் நச்சும் குறைவில்லை
சித்திரை தாண்டிய மார்கழியும்
இன்னும் நித்திரை இன்றியேக் கழிகிறது
அவசரச் சிகிச்சை இமைப்பொழுதில்
அபாயச் சங்கிலியோ மணிக்கழுத்தில்
ஆசுவாசப்படுத்த ஆள்தேடி
அழைத்தனர் மயக்கவியல் துறை நாடி
வேதிய மாற்றங்கள் நாளங்களில்
ஊடுருவும் மூளையின் ஆழங்களில்
சுவாசக்குழாயிடம் ஓர் சமர்களம்
சர்வலோக வலிகளும் சேவித்தன நமஸ்காரம்
துள்ளி எழுந்தார் துயில் நீங்கி
புது மானிடராய் தரணியை தாம் வணங்கி
தாழ்ந்த புருவங்கள் மெல்ல நிமிர்ந்து
நோவற்று சிரித்தார் உடல் சிலிர்த்து
இது யாமம் கடந்த பின்னிரவு
மற்றொரு மானுடன் புதுவரவு
உயிர் காத்து வலி நீக்க வந்தார்கள்
இவ்விரவும் இனி துஞ்சாதே இவர் கண்கள்
Dr. Sakthi Priya
Winner special prize!Final Year PG - MD Anaesthesia, K.A.P.V Medical College, Trichy
ISA NO. 55622/A
கண்ணாடி தரைதளம் , அதில்
முகம் தெரிய சிறுவலம் .
வெறுங்காலில் வீறுகொண்டேன் , உன்
கண்களில் என் கடமை கண்டேன் .
சுற்றமும் நட்பையும் தவிர்த்து, எனை நம்பி வந்தாயே !!
தோழா...
உனை அழவிடுவேனோ?!! அல்ல... அலர விடுவேனோ?!!
போர்முனையில் போராடும் போராளியே! உன்
தலைமுனையில் தவமிருப்பேன் ,
நரம்பினிலே நிறைந்திருப்பேன் ,
நாளத்திலே நயத்திருப்பேன் .
யாரோ நான் ??
பாலூட்டி, சீராட்டி உன் களைப்பாற்றும் அவர் தாயென்றால் ,
(ப்ரொப்ப) பாலூட்டி, தண்ணூட்டி உன் பிணிவலி நீக்கும் நான் ,
உன் தாயோ?!
தீதோடும் , பகையோடும் இராதே எனும் அவர் உன் தந் தையென்றால் ,
தீயமதுவோடும் , புகையோடும் வாராதே எனும் நான் ,
உன் தந்தையோ?!
யார் நான் ?
உன் இருதய துடிப்பால் துடிப்பவன் ,
உன் மூச்சுக் காற்றால் முளைப்பவன் ,
உன் இரத்தம் கண்டால் கொதிப்பவன் ,
உன் சித்தம் சீராக்கி சிலிர்ப்பவன் ,
உன் புறத்தே குத்தும் வஞ்சகன் , நீ
போர் முடிவில் விழித்தால் வியப்பவன் ,
உனை கனவாலே கட்டும் காவலன் ,
தோழா,
பிணிவலி எண்ணி பதுங்காதே,
விழி பிதுங்காதே,
வலி, விழியில் கண்டு திகைக்காதே,
நீ வியர்க்காதே,
உனக்காக நானிருக்கேன் , ஓர்
முகமறியா சினேகிதனாய் , உன்
தோளோடு தோள்கொடுக்கும் ,
தூக்கம் தரும் தோழனாய் !!!
Dr. S.Kandasamy
Madha Medical College and RI, Chennai.
ISA No. K831,
வலியால் வேதனை
வந்ததால் சோதனை /
குறிலோ நெடிலோ
கூவி அலறிட/
ஒப்பில்லா வழியில்
ஔடத மருத்துவர்/
மயக்கமுற செய்து
மனதால் மறந்து/
மூளைதனில் சுழன்று
மருந்திட்ட கலியுக
கடவுள் அவதாரம்/
திரை மறைவில்
திறம்பட இயங்கி/
சுயநலம் பாரா
சூராதி சூரன்/
அறுவை சிகிச்சையின்
ஆணிவேராய்
ஜம்புலனடக்கி/
ஐயமில்லாமல்
மீளா உயிர்தனை
மீட்டுத்தரும்
தோழன்!!!
Dr. K.Vinod
Professor of Anesthesiology, Sree Balaji medical college and hospital
ISA No. V0836, Chennai city branch.
திறமை பல அறிந்தவர்கள்
திரைக்கு பின்னால் மறைந்தவர்கள்
நித்திரையின் வேந்தர்கள்
சாவித்திரியின் மைந்தர்கள்
நஞ்சையும் மருந்தாய் மாற்றுபவர்கள்
நரகத்தை அடைந்தவர்க்கு சொர்க்கத்தை காட்டுபவர்கள்
தசை தளர்த்தவர்கள் விசை வளர்த்தவர்கள்
முதுகில் குத்தினாலும் முடிவில் மாவீரர்கள்
Dr. Syed Thahir
Senior Assistant Professor, Virudhunagar Govt. Medical College
இறைவன் கொடுத்த வரம் தூக்கம்
மயக்குகுநர் தரும் தூக்கம் விஞ்ஞொனம் கொடுத்த வரம்.
பஞ்சு மெத்தையில் புரண்டு புரண்டு படுத்தொலும் வரொத தூக்கம்
மயக்குநர் தந்தொல் வர மறுப்பதில்றல.
இயற்க்கை தூக்கம் தருவது புத்துணர்ச்சி
மயக்குநர் தரும் தூக்கம் தருவததொ புதுப்பிறவி
இடம் பொருள் ஏவல்
தெரியொமல் வந்து சிலரை
துன்புறுத்தும் தூக்கம்
மயக்குநர் தரும் வேளையில் வலியெனும் துன்பத்தை அகற்றுவது விந்தையன்றோ?
தாலாட்டு, மெல்லிசை, மாத்திரை என தூக்ம் விதிக்கும் நிபந்தனை
மயக்குநர் தரும் தூக்த்தில் உண்டொ?
நிபந்தனையற்ற காதல்
எனினும்
வானவில்லாக இதம் தரும்.
இயற்க்கை தூக்கம் ஓர்
ஊக்கமருந்து எனில்
மயக்குநர் தரும் தூக்கம் தன்னிலை மறந்த தியானம்.
தூக்கத்தில் கனவெனும்
மாயலோகம் விரிகிறது
மயக்குநர் தரும் தூக்கத்தில் வலியற்ற அற்புத சுவர்க்கத்தில்
ஆன்மாவின் இன்பச்சுற்றுலா.
தூக்கத்தில் கடிதல், ஏசுதல், உளறுதல் உண்டு.
மனிதகுலம் மாண்புற வந்த மயக்க தூக்கத்தில் ஏதுமிலை.
மெய்ஞொன மோன நிலையை உருவொக்கும்
பரவச மருந்துகள் கைவசம்.
தூக்கம் ஆக்கபணிளுக்கு
வந்துவிட்டொல்...?
மாணவன் படிக்கும் போது,
ஓட்டுனர்கள் பணியில் உள்ள போது,
புதுதம்பதிகளின்
முதல் இரவு என பல உண்டு.
மயக்குநர் தரும் தூக்கமோ உயிர்வதையை தடுக்கும் மாமருந்து மட்டுமல்ல.
ஆக்கப்பணிகளுக்கு ஊக்கம் தரும் நாகரிகம்.
தோழன் தரும் தூக்கம் பலவகை.
சிறு தூக்கம்
குறு தூக்கம்
நெடு தூக்கம்
புரியாத புதிர் மயக்குநர் எனும் தோழன்.
1842 முதல் ஆழிப் பேரலை வரும் வரை
மயக்குநர் இன்றி மானிடனுக்கு ஏது நிம்மதி?
தூக்கம் தரும் தோழன்
மானுடனின் மெய் தோழன்
Dr. S.Sankaravadivelan
ISA No. 4437, Tirunelveli City Branch
இளையராஜா
என் இனிய ராஜா
அவனே என் உறக்க ராஜா
Dr. Kavitha
SRM Hospital, Trichy
ISA No. K2041/A , ISA Pondicherry.
குளிர்ந்த இடம் மயிர்சிலிர்ப்பு செய்ய
புகையாக எண்ணங்கள் பரவ
பயம் என்னை கொல்ல
என் அருகே
கண் மட்டும் காட்டி நின்றான்
என்னை உறக்கத்தில் ஆழ்த்தி
கண் இமைக்காமல் பார்த்து நின்றான்
நான் விழிக்கும் வரை
Dr.J.Nisha Saral
Senior Assistant Professor, Department of Anaesthesiology, GMKMCH, Salem.
ISA No. N1066
ஆர்கலிப்பேரலையினு மதியிரைச்சலுன் மதியிரைச்சல்,
ஆர்கலியோ யிந்நோய்மையெனக்கதியதிருமுள முளைச்சல் !
வல்லிப்பிணை வலி நெறியின்றி நெறிக்க , யாங்கு கூடும் அனந்தல் ?
கையறுநிலை தலைத்துயில் நீங்கு நேரிடின்
பேறுதான் நித்திரை , நித்திலமே !
நித்திரை உமக்கு நித்திலமே !!
முத்துறையும் எத்துறையும் காணா இம்முத்தைக்கொழிக்க
முத்துச்சலாபமேற்கும் குளியாளி தன் நுதல் மட்டும் மத்தகமாயும் விழியில் பதிக்க ,
முகத்திரைக்குள் மூச்சடக்குவான் நீவிர் எயிறுகாண் பேருவகை பயில ,
ஆனந்தம் பயில , அனந்தலும் அனங்கனுந் துறந்தவன் யாங்கு துயில ?
நித்திலமாம் உம்முயிர் அவனுக்கு !
நித்தலமாம் நித்திரை உமக்கு !!
இத்திரைக(யு)டல் குளியாளி உமது துணையாளி ,
கேட்டல் அல்லன் யாவதும் காண்டிலன் புரவலனும் புலவனும்
பேணிய காதற் கேண்மையினும் பாங்குறுங் காதலனாம் !
அவன் உம் நாடிக்கும் நாசிக்காற்றுக்கும் காதலனாம் , சோதாரனாம் !
தன் கண் முகிழ்த்தலுந் துச்சமெனத்துஞ்சாதுமக்குத் தூக்கம் தரும் தோழன் !!
Dr. Geetha J
Associate Professor, Dhanalakshmi Srinivasan Medical College, Siruvachur, Perambalur
ISA No. G0460, ISA Tiruchirapalli City Branch
யாதுமாகி நின்றாய் தோழா
எங்கும் நீ நிறைந்தாய்
அவசர சிகிச்சை தீவிர சிகிச்சை
அறுவை சிகிச்சை வலிக்கு சிகிச்சை
அறுவை அரங்கின் உள்ளும் புறமும் அறுவை நிபுணர் பலர்க்கும் பயனாய்
யாதுமாகி நின்றாய் தோழா
எங்கும் நீ நிறைந்தாய்
தூக்கம் தருவாய் துயிலும் எழுப்புவாய்
தன் தாக்கம் என்னென்று அறியாமல் பணி செய்வாய்
அறுவை அரங்கின் லோ பன்முகப்பணி உனக்கு
மனிதரை கணிப்பாய் கருவியை கண்காணிப்பாய்
உயிரளிப்பாய் உயிர்பிரிந்ததையும்உறுதிசெய்வாய்
திரைமறைவில் இருந்து தலைமை பணிக்குத் தேர்ந்தாய்
தூக்கம் தரும் தோழா விழித்தெழுந்து வாவா!
யாதுமாகி நின்றாய் தோழா எங்கும் நீ நிறைந்தாய்!
Dr. Janani S R
Neuroanesthesia and Neurocritical care Fellowship in NIMHANS, Bengaluru
ISA No. J1657, ISA Kanyakumari City Branch
திரைக்கதையின் இயக்குனரைப் போல
திரைக்கு பின்னால் தலைவனாய் நின்றானோ!
ஆழ் கடலின் சாந்ததைப் போல
சிகிச்சையின் பயத்தை திறம்பட அழித்தானோ!!
பசி மயக்கத்தில் வந்தவரை
முழு மயக்கம் செய்தானோ!
வேதனையுடன் வந்தவரை
வலி மறக்கச் செய்தானோ!!
காற்றடைத்த பையோடு வந்தானோ!
சுவாசத்தை பறித்துச் சென்றானோ!!
இயந்திர திரையின் சப்தம் கேட்டானோ!
நோயாளியின் நிலை அறிந்தானோ!!
துணிச்சலுடன் பல்பணி செய்தானோ!
சகலகலா வல்லவனாய் திரிந்தானோ!!
அர்சுனனின் இலக்கைப் போல்
அவன் கவனம் சிதறுவதில்லை!!
கூர்ந்த வாளினைப் போல்
அவன் பார்வை ஓய்வதில்லை!!
வல்லவனுக்குப் புகழ் கிட்டுவதில்லை!
இருந்தும் அவன் சலிப்பதில்லை!!
திறமைமிக்க கைகள் தளர்வதில்லை!
குலைவு நிலையிலும் அவன் கை நடுங்குவதில்லை!!
அறுவை சிகிச்சை முதல் அவசர சிகச்சை வரை!
உயிரை காக்கும் அவன்!
தூக்கம் தரும் தோழன்!!!
Dr. A.Devanand
Govt. Hospital, Virudhachalam
ISA No. D2201, ISA Chidambaram City
உதிரம் கசிந்து உருக்குலைந்து கிடக்க!
உணர்வையும் உடல்வலியையும் கையடக்கி
உறங்க வைப்பவன் இவன்!
மயக்கத்தில் மரணத்தை மடிய வைத்து
மருந்தென நிற்பவன் இவன்!
தேகம் தொட்ட அறுவை கத்தியையும்
தேன் தொட்ட இறகென மாற்றும் மாயம்
படித்த மாயக்காரன் இவன்!
இளமையோ முதுமையோ! தாய்மையோ
ஆண்மையோ! வலி எதற்கு? வால் ஏந்தும்
வீரணாய் அறுவைகளம் காண்பவன் இவன்!
குழல் நுழைவு முதல் உடல் அசைவு வரை எதும்
சாத்தியம் எனும் சாணக்கியன் இவன்!
உடலுக்கே கவசமாய், உயிருக்கு உத்திரமாய்
உயர்ந்து நிற்பவன் இவன்!
காலம் நேரம், உணவு உறக்கம்
இவையாவும் இவன் செய்யும் தியாகம்!
பல உறவுகளுக்காக தன் உறவுகளையும்
கூட தள்ளி வைத்து தசைமருக்க செய்வவன்
நம் மயக்கவியலில் நண்பன்!
Dr. S.Senthil kumar
Erode
ISA No. S1881
மயக்க மருந்தால் மயக்கம் தருவாய்,
மனமேலிசை பாடி நீ நடுவாய்,
அறுவைச் சிகிச்சை ஆனந்தமாய்,
அச்சம் அறிந்திடும் மனமெல்லாம்.
வலி நீக்கி, நம்பிக்கையை விதைப்பாய்,
வாழ்க்கை விதைகளை புதுப்பாய்,
அறிவின் ஆழத்தில் நீ விளைந்தே,
நோயாளி நெஞ்சுக்கு நலம் பரப்பாய்.
மாயா செய்யும் கலைஞனாய் நீ,
ஆறுதல் தரும் தெய்வமாய் நீ,
உன் கைவண்ணம் நம்பிக்கையின் சின்னம்,
நோயின் இருளில் நீயே ஒளிச்சுடர்.
வாழ்க்கையை மாற்றும் வரம் உன்னிடம்,
மருத்துவம் தாங்கும் கரம் உன்னிடம்,
உன்னதப் பணியில் நீ நின்று,
உலகத்தை காக்கும் கலைஞன் நீ!
Dr. Punithavathy
KMCH Medical College, Coimbatore
ISA No. P2292, Coimbatore
(அறுவை சிகிச்சையாளருக்கு மயக்குநர் வரையும் மடல். )
அன்பு அறுவை சிகிச்சையாளரே !
நாங்கள்,
வினை களையும் கரங்களுக்கு
துணை புரியும் கரங்கள்!
உமக்கு,
விளக்கு திருத்தும்
பணிவும் கொள்வோம் !
விளக்கம் கேட்கும்
துணிவும் கொள்வோம் !
மிகையாமல் குறையாமல்
பக்குவமாய் மருந்தளிப்போம்!
உமது பணி சிறந்திடவே
எமது பணி செய்திடுவோம்!
தீவிரமோ அவசரமோ
தக்கபடி தலைமை ஏற்போம்!
அனுமதியில்லா அரங்கினுள்ளே
அனுதினமும் புதுமை செய்வோம்!
உறங்க வைத்த பின்னாலும்
உற்று நோக்கி உயிர்காப்போம் !
மயங்க வைத்த பின்னாலும்
மனிதரின் மாண்பு காப்போம்!
உயிர்கள் காக்கும் உம் பணியில்
உற்ற தோழனாய் உடன் நிற்போம்!!
சிகிச்சையின் துன்பம் நீக்கி
தூக்கம் தரும் தோழர் ஆவோம்!!
Dr. Siva Saminathan
Thanjavur medical college
ISA No. S3050, ISA Trichy City Branch
தூக்கம் தரும் தோழன்
அவசர ஊர்திகள்
அநேக நேரம்
அவரையே சென்றடையும் !
இரத்த நாளத்தில்
இலகுவாய் துளைக்கருவி
இவரைப் போல செலுத்த
இவ்வுலகில் யாரும் இல்லை !
சில நேரங்களில்
மூளை கட்டளையிட்டும்
மூச்சு விட மறுக்கும் நுரையீரல்;
இவர் பேச்சைத் தட்டாது !
வளி இவரிடம் வழி கேட்கும்
வலி இவரிடம் விலகி ஓடும்
வலியின் உச்சம் பிரசவம்
வலியின்றி புத்துயிர் பெற்றது
இவர் வல்லமையால் !
பை-பாஸ் முதல் சிசேரியன் வரை
இருதய வால்வு முதல் குடல்வால் வரை
அறுவை சிகிச்சைகள் ;
அவரின்றி
அணுவளவும் அறுக்க முடியாது!
நோயாளிகள் பார்த்திராத முகம் !
பாராட்டு வேண்டா மனம் !
பல உயிர்களின் திறவுகோலாய்
மருத்துவ உலகின் மந்திரக்கோலாய்
திரைக்குப் பின்னால் இய(ங்)க்கும்
மயக்குனர் தாம் இவர் !
Dr. Parghavi
PG 2nd Year ,SMVMCH. Puducherry
ISA NO. P3903/A, ISA Pondicherry
கூரிய கத்திகளும் கூன் போடும்
சிமிழுக்குள் சிக்கிய சிற்பிகளின் முன்
ஆறாத ரணமும் அடங்கி போகும்
ஆறாக பாயும் அமிலங்கள் முன்
ஆழ்ந்த உறக்கம் அள்ளி தருவான்
அதிசய உலகுக்கு அழைத்து செல்வான்
மூர்ச்சை ஆக்கும் மாயவன்
மூச்சினை காக்கும் சேவகன்
நாசிகள் கண்ட அற்புதம்
குளோரோபார்ம் விதைத்த மயக்கம்
கண்ணீர் மறைந்த சாயம்
ஈதர் செய்த மாயம்
வெந்நிற டிப்ரிவன் அருவியாய் கொட்ட
நிறமில்லா நீர்மமெல்லாம் நரம்புகளில் ஊற
பிணி போக்கும் பணிக்கு புறப்பட்டது
மாயா ஜாலம் செய்யும் "மயக்க மருந்து"
Dr. Suvetha Shanmugam
Government medical College, Cuddalore
ISA No. S9172/A, ISA Madurai
அரி ஆழாய்ந்து
முல்லைக் கொடி வாசம் சரிப் பார்த்து
உச்சிச்சிரசை உணர்ச்சித்துற வைத்து
விழிக்கோளம் பின்று பறிப்பேணாளுந்து
எலும்பில்லா தசையை எட்டி உதைத்து
பிளந்துக் கிடக்கும் பிறை நிலவை கண்டு ரசித்து
கூவல் வழியே வளி செலுத்தும் பறி அனுப்பி
துவார பாலகர்களை அகற்ற சகாயம் செய்து
இந்திரகோபத்தினை செடியிலிருந்து விரட்டி அடித்து
ஓர் துளை புல்லாங்குழல் உருவாக்கி
தெரியல் முடிச்சுகளை அவிழ்த்தெறிந்து
அருங்கலப்பேழையின் பொன்னை மீட்டெடுத்து
நால்வகைப் படைகளை அடக்கி ஆட்சி செய்து
அறுவை நிபுணர் செய்யும் பண்டுவத்திற்கு
சேயின் துயில் கலையா,
முத்தமிடும் தாயின்
தார்மீக பொறுப்பு பெற்றவர்கள்
ஆம்!!!!
உங்கள் தூக்கம் தரும் கேளன்.
DR. K.Selvakumar
ISA No. S8972/A, ISA Chidambaram City Branch
மயக்குனன்.
முதுகில் ஊசியிட்டு கால்
மரக்கச் செய்து
வலிகள் யாவும்
பறக்கச் செய்தவன்.
மூச்சை நாடியை தன்
கரத்தில் சுழற்றுபவன்
உயிரை உணர்வை தன்
திறத்தால் கட்டியவன்
சிறிய நரம்பிலும்
மருந்தை பாய்ச்சுபவன்
பெரிய சர்ஜரியையும்
இலகுவாய் மாற்றுபவன்
நின்ற இதயத்தை
துடிக்கச் செய்கிறவன்
நிறுத்தி இதயத்தில்..துளை
அடைக்க உதவுபவன்
நொடிகள் தோறும்
துடிப்புடன் இருந்திடுவான்.
இதய துடிப்பை மூச்சை..
கடவுள் போல் காத்திடுவான்.
Dr. K.Reshma
Anaesthesiologist, GEM Hospital, Chennai
பிணியாளனொருவர் அங்கம் முறையில்லையென நாடுகிறார்
அறுவை சிகிச்சை நிபுணரை,
ஊசியென்றாலே அஞ்சி நிற்கும் வஞ்சகமற்ற நெஞ்சம் கொண்டவரிடம்,
உம் அங்கத்திற்குத் தேவை
அறுவை சிகிச்சையென்றவுடன்,
அதிர்ந்து போனவனுக்கு
ஆறுதலுரைத்து,
உதிர பரிசோதனை எடுத்துக்கொண்டு
எட்டாம் மாடியிலிருப்பவரிடம் ஆலோசனை எடுத்து வாயென்றார்!
விழி பிதுங்கி வந்தவரிடம்
ஆதி முதல் அந்தம் வரை- சுமார்
ஐம்பது வினாக்கள் கேட்டார்
அந்த(அங்க) வரலாறு மட்டுமன்றி, தன்
சொந்த வரலாறு சிலவும் சொல்லிவிட்டு
சற்றே மனம் தேர்ந்து சென்றார்- ஏனெனில்
எட்டாம் மாடியிலிருந்தவர்
எள்ளளவும் பிணியின்றி
எண்ணிய சிகிச்சையை முடிக்கலாமென்றதால்!
அறுவை சிகிச்சை நாளும் வந்தது!
அச்சமுடன் வந்தார் அரங்கத்திற்கு!!!!
எட்டாம் மாடியில் எண்ணூறு கேள்விகள் கேட்டவரெங்கே என்றெண்ணி
விட்டத்தைப் பார்த்தபடியே கண்ணயர்ந்தார்!
விழித்துப் பார்க்கையில்…
வினாக்கள் பலவிற்கும் விடையின்றி,
வயிற்றில் பார்த்தால் பிளாஸ்திரி!!!
எட்டாம் மாடிக்காரர் மீண்டும் வந்தார்!
புன்முறுவலுடன் யார் நீங்கள் என்று
வினவினார் பிணியாளர்!
வலியின்றி, வேதனையின்றி;
அசைவின்றி, அச்சமின்றி
அறுவைசிகிச்சை செய்யவுதவும்
தூக்கம் தரும் நண்பன், நான்
மயக்கவியல் நிபுணர் என்றுரைத்து மாயமானார்!
விழி பிதுங்கி வந்த பிணியாளர்
வியப்புடன் மீண்டும் கண்ணயர்ந்தார் !